Propellerads

கேரளாவில் முத்தத் திருவிழா நடத்த முயன்ற 50 பேர் கைது


கேரளாவில் முத்தத் திருவிழா நடத்த முயன்ற 50 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர்.

அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

இந்த காட்சிகளை அந்த அரசியல் கட்சிக்கு எதிராக செயல்பட்டுவரும் ஒரு கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல் கடந்த 23-ம் தேதி ஒளிபரப்பியதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டம்-ஒழுங்கை சிலர் தங்களது கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரித்தும், கண்டித்தும் கேரள மக்களிடையே பரபரப்பான பட்டிமன்றங்கள் நடைபெற்று வந்தன.

இன்று (2-ம் தேதி) மாலை 5 மணியளவில் கொச்சி நகரில் உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆணோடு பெண்கள் கட்டியணைத்து, முத்தமிடும் திருவிழாவுக்கு ‘ஃபேஸ்புக்’ மூலம் ஒரு அமைப்பு அழைப்பு விடுத்தது.

’கிஸ் ஆஃப் லவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் இதுவரையில் 2,722 பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். 8,510 பேர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர். இதே நாளில் கோழிக்கோடு, திரிச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்த ‘முத்தத் திருவிழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான செய்தி பரவத் தொடங்கியதும் இந்த கலாச்சார சீர்கேட்டுக்கு போலீஸ் சட்டங்களின் மூலம் தடை விதிக்க வேண்டும் என இரு மாணவர்கள் கேரள ஐகோர்ட் அமர்வின் முன்னர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவினை விசாரித்த நீதிபதிகளிடம் கருத்து தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதனையடுத்து, இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டவாறு இன்று மாலை 5 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று ’கிஸ் ஆஃப் லவ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், பிரபல குறும்பட இயக்குனருமான ராகுல் பசுபாலன் நேற்று அறிவித்திருந்தார்.

கலாச்சார காவலர்கள் என்று கூறிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவோரை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, சுமார் 500 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கொச்சி நகரின் மெரின் டிரைவ் கடற்கரை உணவகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியத்தில் இருந்தே ஆயிரக்கணக்கானவர்கள் குவியத் தொடங்கினர். ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும் அந்த இடத்தை மொய்க்கத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு அதிகமானது.

இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில சிவ சேனா தொண்டர்களும் சில இஸ்லாமிய அமைப்பினரும் இன்று எதிர்ப்பு பேரணிகளை நடத்தினர்.

இந்நிலையில், எர்ணாகுளம் சட்டக்கல்லூரி அருகிலிருந்து கொச்சி நகரின் மெரின் டிரைவ் உணவகத்தை நோக்கி இன்று மாலை 4.30 மணியளவில் ஊர்வலமாக செல்ல முயன்ற சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க தப்பியோடிய சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் ஒருவரும் காயமடைந்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் குறும்பட இயக்குனர் ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
கேரளாவில் முத்தத் திருவிழா நடத்த முயன்ற 50 பேர் கைது Reviewed by The King on 7:46 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.