மறுபிறவி கொடுத்த மோடியின் பாதம் தொட்டு வணங்க ஆசை: தூக்கில் இருந்து தப்பிய 5 மீனவர்கள் நெகிழ்ச்சி
கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் 28–ந் தேதி ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், பிரசாத், வில்சன், லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் விசாரணை நடந்து வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு, கடந்த அக்டோபர் 30–ந்தேதி தூக்கு தண்டனை விதித்து இலங்கை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ராமேசுவரம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 5 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.
அரசியல் கட்சி தலைவர்கள், தண்டனை பெற்ற மீனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தமிழக அரசு, மத்திய அரசிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் பேசியதை அடுத்து 5 மீனவர்களுக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது. தூக்கு தண்டனையில் இருந்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் 5 பேரும் நேற்று 12 மணியளவில் தாய் மண்ணான தங்கச்சிமடத்திற்கு திரும்பினர்.
கடந்த 20 நாட்களாக போராட்ட களமாக திகழ்ந்த தங்கச்சிமடம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. 5 பேரையும் பார்த்த அவர்களது குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மனைவி–பிள்ளைகள் கண்ணீர்மல்க கட்டியணைத்து உச்சிமுகர்ந்து வரவேற்றனர். இவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் குழந்தை ஏசு ஆலய வளாகத்தில் கொடுத்த உற்சாக வரவேற்பு மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், பிரசாத், வில்சன், லாங்லெட் ஆகியோரை 3 ஆண்டு சிறைவாசத்தை மறந்து மறுபிறவி பெற்ற சந்தோசத்துக்குள் அழைத்துச் சென்றது. அவர்கள் 5 பேரும் முகம் மலர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
சாவின் விளிம்பில் இருந்து தப்பிய 5 பேரும் ‘‘மாலை மலருக்கு’’ அளித்த விசேஷ பேட்டி வருமாறு:–
கேள்வி:– உங்களை கைது செய்தபோது நடந்த சம்பவம் பற்றி...?
பதில்:– நாங்கள் 5 பேரும் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் 28–ந்தேதி மீன்பிடிக்கச் சென்றோம். தலைமன்னாருக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எங்கள் படகை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி முனையில் மீன்களை பறித்துக் கொண்ட அவர்கள், எங்களையும் மிரட்டி இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்றதும் எங்களை கடுமையாக தாக்கினர். கடற்படை முகாமில் எங்கள் கண்களை துணியாலும், கால்களை கயிற்றாலும் கட்டி வைத்து சித்ரவதை செய்தனர்.
கே:– உங்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது அப்போது தெரியுமா?
ப:– அந்த நேரத்தில் எங்களிடம் எதையுமே அவர்கள் சொல்லவில்லை. சிலமணி நேரம் கழித்து போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டிருந்த 3 பேரை காண்பித்து இவர்களிடம் இருப்பது நீங்கள் கொடுத்த போதைப் பொருள்தானே என்று கேட்டனர். அப்போதே நாங்கள் செத்து விட்டோம். எங்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. எப்போதுமே உண்மை பேசும் நாங்கள், இலங்கை கடற்படையினரின் இந்த பொய் குற்றச்சாட்டுக்கு உருக்குலைந்து போனோம்.
அந்த 3 பேரையும் எங்களுக்கு தெரியாது என்று எத்தனை முறையோ தெரிவித்தோம். ஆனாலும் அவர்கள் எங்கள் பேச்சை கேட்கவில்லை. அவர்களுக்குள்ளே சிங்கள மொழியில் பேசிக் கொண்டனர். பின்னர் நாங்கள் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கே:–சிறையில் உங்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது...?
ப:– ஒரு சர்வதேச குற்றவாளியை நடத்துவது போல நடத்தினார்கள். சரிவர சாப்பாடு கொடுக்க வில்லை. வெளியில் செல்ல முடியாத பல்வேறு இன்னல்களை நாங்கள் அனுபவித்தோம். தவறு செய்யாத எங்களுக்கு நேர்ந்த சோதனையை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கே:– இந்த வழக்கில் உங்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
ப:– எங்கள் மீது போடப்பட்டதே பொய் வழக்குதான். அந்த பொய் வழக்கில் இருந்து நிச்சயம் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இலங்கை கடற்படையினரால் சாட்சியாக சேர்க்கப்பட்ட 3 நபர்கள் எங்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தனர். ஆனாலும் நாங்கள் நிரபராதி என்று நீதிபதி முன்பு கூறினோம். அதிகபட்சமாக சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு தூக்கு தண்டனையை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனோம்.
கே:– தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
ப:– தூக்கு தண்டனை என்று தெரிந்ததும், எங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தோம். போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றபோது எந்த தவறும் செய்யாத எங்களுக்கு மரண தண்டனை கிடைத்து விட்டது. எனவே நீங்களே எங்களை சுட்டு கொன்று விடுங்கள் என்று போலீசிடம் கூறினோம். அவர்கள் எங்களிடம் எதுவும் பேச வில்லை. நேராக வெளிக்கடை சிறையில் கொண்டு போய் அடைத்து விட்டனர்.
கே:– இவ்வளவு சீக்கிரத்தில் தங்கச்சிமடம் வருவீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?
ப:– நாங்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆவோம் என்றோ, தங்கச்சிமடத்திற்கு திரும்பி வருவோம் என்றோ மனைவி குழந்தைகளை சந்திப்போம் என்றோ கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் எங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய அரசு உங்கள் விடுதலைக்காக இலங்கை அரசுடன் பேசி வருகிறது என்று தெரிவித்தனர். அப்போதுதான் எங்களுக்கு சிறிது நம்பிக்கை துளிர்த்தது.
கே:– உங்கள் விடுதலையில் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:– எங்களுக்கு மறு பிறவி கொடுத்ததே நரேந்திர மோடிதான். அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் பேசிய பின்னர்தான் எங்களுக்கு விடுதலை கிடைத்தது. பிரதமர் என்ற முறையில் அவர் இலங்கைக்கு கொடுத்த அழுத்தம் எங்கள் உயிரை காப்பாற்றி உள்ளது. அவருக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளோம்.
கே:– டெல்லி சென்ற உங்களுக்கு மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைக்க வில்லையே ஏன்?
ப:– இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் எங்களை விமானத்தில் அழைத்து வந்தனர். எங்கு செல்கிறோம் என்றே எங்களுக்கு அப்போது தெரியவில்லை. விமான நிலையத்தில் வந்து இறங்கிய போதுதான் டெல்லியில் இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டோம். பின்பு அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் பிரதமருடன் நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்து விட்டு திரும்பி விட்டோம்.
மோடியை சந்திக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும், அப்போது எங்களுக்கு மறுபிறவி கொடுத்த அவரது பாதத்தை தொட்டு வணங்க ஆசைப்படுகிறோம்.
கே:– பிரதமர் மோடி பற்றி தனிப்பட்ட உங்கள் கருத்து என்ன?
ப:– அவரது திறமைக்கு எங்களை விடுதலை செய்ததே ஒரு உதாரணம். ஒரு தாய் ஒரு உயிரை 10 மாதம் கழித்துதான் பூமிக்கு தருகிறாள். ஆனால் நரேந்திர மோடி 20 நாளில் எங்கள் 5 பேரின் உயிரையும் தந்திருக்கிறார். அவரால் மட்டுமே இது முடியும் என்று நம்புகிறோம்.
கே:– உங்கள் விடுதலைக்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பற்றி...?
ப:– நாங்கள் கைது செய்யப்பட்ட போதே எங்களுக்கு ஆதரவாக இருந்தது தமிழக அரசுதான். முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா எங்களை முதன் முதலில் நிரபராதி என்று அறிவித்தார். அது மட்டுமின்றி வழக்கு செலவுக்காக ரூ. 5 லட்சம் வழங்கினார். எங்கள் குடும்ப செலவுக்காக முதல் கட்டமாக தலா ரூ. 2½ லட்சம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். நேற்றும் தமிழக அரசு சார்பில் எங்களின் மறுவாழ்விற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வழி நடத்திய அம்மாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
கே:– நீங்கள் தாய் மண்ணிற்கு திரும்ப தமிழகத்தில் நடந்த போராட்டம் காரணம் என்று நினைக்கிறீர்களா?
ப:– நிச்சயமாக போராட்டமும் முக்கிய காரணம். தங்கச்சிமடம் பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எங்கள் உயிரை காப்பாற்ற குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் அனைவரையும் நினைத்து பார்க்கிறோம். எங்களை குடும்பமாக இணைத்ததில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது.
கே:– மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வீர்களா?
ப:– எங்கள் தொழிலே மீன் பிடிப்பதுதான். எங்கள் குடும்பத்தினர் இனிமேல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனாலும் பிழைக்க வழி தேட வேண்டும். எனவே மறு தொழில் செய்வதற்கு மாநில அரசு உரிய உதவிகளை வழங்கினால், அதுபற்றி யோசிப்போம். ஆனாலும் தற்போது மீன் பிடிப்பதை தவிர எங்களுக்கு வேறு தொழில் செய்ய இயலாது. எனவே கடலுக்குள் செல்வது குறித்து சில நாட்கள் கழித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மறுபிறவி கொடுத்த மோடியின் பாதம் தொட்டு வணங்க ஆசை: தூக்கில் இருந்து தப்பிய 5 மீனவர்கள் நெகிழ்ச்சி
Reviewed by The King
on
12:33 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .