யாழ்.குருநகர் யுவதி ஜேரோமி கொன்சலிற்றாவின் மரணம். பாதிரியார்கள் சாட்சியம். -
யாழ்.குருநகர் யுவதி ஜேரோமி கொன்சலிற்றாவின் மரணம். பாதிரியார்கள் சாட்சியம்.
யாழ்.குருநகர் யுவதி ஜேரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை ஒரே நாளில் இரு தடவைகள் மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின் முடிவில் எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமைவரைக்கும் வழக்கை ஒத்திவைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 13 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் மாலை பெரிய கோவிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து ஜேரோமி கொன்சலிற்றா என்னும் யுவதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த யுவதியின் மரணத்திற்கு யாழ்.மறைமாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டு பாதிரியார்கள்தான் காரணம் என்று யுவதியின் தாயார் பொலிஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதன்படி குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்கள் இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினைப் பதிவு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி முதற்தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது உயிரிழந்த யுவதியின் தாய், தந்தை ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உயிரிழந்த யுவதி பயன்படுத்திய கைத்தொலைபேசியை விசாரணைக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களையும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி மேற்படி வழக்கு திங்கட்கிழமை மீண்டும் இரண்டாவது முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கொன்சலிற்றாவின் கைத்தொலைபேசி தொடர்பாக தகவல்கள் பொலிஸாரினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. சமர்ப்பிக்கப்பட்ட அவ்வறிக்கையில் சந்தேகிக்கப்படும் வகையில் எந்த ஒரு கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறிவில்லை என்று தெரியவந்தது.
மேலும் ஊடகவியலாளர்கள் மன்றில் இருப்பதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களை திறந்த நீதிமன்றதில் ஆஜர்படுத்த முடியாது என்றும், மூடியமன்றில் அவர்களை ஆஜர்படுத்துமாறு பாதிரியார்கள் சார்பில் ஆஜராகிய பி.அன்ரன் புனிதநாயகம் கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கை தற்காலிகமாக ஒத்திவைத்து மீண்டும் 1.30 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் பி.சிவகுமார் உத்தரவிட்டிருந்தார்.
மீண்டும் வழக்கு ஒரே நாளில் இரண்டாவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்கள் இருவருடைய வாக்குமூலங்களும் தனித்தனியே பதிவு செய்யப்பட்டன. குறித்த பாதிரியார்கள் இருவரும் மன்றில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் போது நீதவான் குறுக்கு விசாரணையும் செய்தார்.
மேலும் இரு பாதிரியார்களுடைய வாக்கமூலத்தினைப் பதிவு செய்த நீதவான் இவ்வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரைக்கும் ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் வாக்குமூலமளித்த இரு பாதிரியார்களும் உயிரிழந்த ஜேரோமி கொன்சலிற்றாவுடன் கைத்தொலைபேசி தொடர்பு வைத்திருந்தது உண்மை, ஆனால் மறைமாவட்டக் கல்வி சம்மந்தமாகவே எமது தொடர்புகள் அமைந்திருந்தன. தனிப்பட்ட ரீதியில் எந்தவிதத் தொடர்புகளும் எமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். தமது வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது ;
உயிரிழந்த கொன்சலிற்றாவினை மறைகல்வி நிலையத்தின் ஊடாக எமக்கு தெரியும். இதனால் நாங்கள் கொன்சலிற்றாவுடன் தொடர்புகளை வைத்திருந்தோம். குறிப்பாக நாம் கைத்தொலைபேசியிலும் தொடர்புகளை வைத்திருந்தோம்.
ஆனால் அத்தொடர்புகள் தனிப்பட்ட தொடர்புகள் இல்லை. மறைமாவட்ட கல்வி சம்மந்தமாகவே அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தோம்.
குறிப்பாக இன்று மறைமாவட்டத்திற்கு வருவாயா என்று கேட்கும் போது காலை வணக்கம் மற்றும் மாலை வணக்கம் என்றும் சேர்த்து குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அனுப்பிவைத்தோமே தவிர தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பினையும் நாம் கொண்டிருக்கவில்லை.
ஆனாலும் கொன்சலிற்றாவின் தாய், தந்தை மற்றும் ஊடகங்களும் கூறும் கருத்துக்கள் எமக்கு மனவேதனையை தருகின்றன.
யாழ்.குருநகர் யுவதி ஜேரோமி கொன்சலிற்றாவின் மரணம். பாதிரியார்கள் சாட்சியம். -
Reviewed by The King
on
7:39 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .